Friday, September 5, 2014

நல்ல மகனா? இல்லை நல்ல கணவனா?

“என்னப்பா மாணிக்கம் தீபாவளிக்கு நம்ம வீட்டுக்கு வரலையா? மதுரைக்கு உன் மனைவி வித்யா வீட்டுக்கு வந்துவிட்டு அப்படியே பாம்பே போயிடுவியா?” என்றாள் அம்மா சத்யா அழுகையுடன்.

“அப்படியெல்லாம் இல்லைம்மா. காரைக்குடிக்கு வர முயற்சிக்கிறேன்” என்றான் மாணிக்கம் வருத்தத்துடன்.

“என்னவோ நீ நல்லா சந்தோஷமா இருக்கனும்ப்பா. அது போதும் அம்மாவுக்கு. நீ தீபாவளி செலவுக்கு அனுப்பிய பணம் கிடச்சதுப்பா” என்றாள் சத்யா.

“சரிம்மா நான் மதுரை வந்து உங்களைக் கூப்பிடுறேன்” என்று ஃபோனை ஹேங் அப் பண்ணினான்.

மாணிக்கத்துக்கு கல்யாணம் ஆகி 6 வருடமாகிவிட்டது. மும்பையில் ஒரு நல்ல வேலையில் இருக்கிறான். நடுத்தர வர்க்கத்தில் பிறந்த அவனை எப்படி எப்படியோ கஷ்டப்பட்டு படிக்கவைத்தார்கள் அவனுடைய பெற்றோர்கள்.

அவன் அம்மா சத்யாதான் வித்யாவை அவனுக்கு சரியான மணமகள் என்று தேர்ந்தெடுத்தது. வரதட்சணை எல்லாம் மாணிக்கம் வாங்கவில்லை. அதை அசிங்கமாக நினைப்பவன் தான் அவன். ஆனால் வித்யாவின் பெற்றோர்கள் மகளுக்கு நெறைய நகைபோட்டு கல்யாணம் செய்துவைத்தார்கள். மகளுக்கு நகை போட்டு பெருசா செய்யலைனா அவர்களுக்கு அவமானம் என்று அவர்களா செய்தது அது. அவனைப் பொருத்தமட்டில் அவைகள் அவள் நகைகள். அவளுக்கு அவள் பெற்றோர்கள் கொடுத்தது. மாணிக்கம் அதை தொடப்போவதுகூட இல்லை. அது அவனுக்கு தேவையும் இல்லை. அதை அவர்களுக்கு திருப்பிக்கொடுப்பதிலும் எந்த ஆட்சேபனையும் இல்லை.

கல்யாணம் நடக்குமுன் அவன் மனைவி வித்யாவின் அம்மா, சித்திகள் மற்றும் சொந்தக்காரர்கள் எல்லோருமே அவன் அம்மா சத்யாவிடம் மதிப்பும் மரியாதையுடன் இருந்தார்கள். அவர்கள் எல்லோருமே அவனுக்கு கொஞ்சம் தள்ளிய சொந்தம்தான். அவன் அம்மா சத்யா மேல் உயிராக இருப்பதுபோல் நடித்தார்கள். ஆனால் மாணிக்கத்துக்கு அப்போவே தெரியும், அவர்கள் அன்பெல்லாம் வெறும் நாடகம் என்று. அவன் நினைத்ததுபோலவே, கல்யாணம் முடிந்த அடுத்த நாளே, எல்லாம் மாறிவிட்டது. மாணிக்கம் என்னவோ இனிமேல் அவர்களுக்குத்தான் சொந்தம் போலவும், அவன் அம்மா சத்யா வேண்டாதவளாக மாறிவிட்டாள். அதை மாணிக்கமே கண் கூடாகப்பார்த்தான். அவன் அம்மாவிடம் வித்யாவின் அம்மா மற்றும் தங்கைகள் பேசுறவிதம், கொடுக்கிற மரியாதை எல்லாமே ஒரே நாளில் மாறியது. இதேபோல் அவர்கள் அவன் அம்மாவை கல்யாணத்திற்கு முன்பு நடத்தி இருந்தால், நிச்சயம் வித்யாவை கல்யாணம் செய்து இருக்க மாட்டான், மாணிக்கம். அவனுக்கு அவன் அம்மா என்றால் உயிர்.

ஆனால் மாணிக்கத்தின் அம்மா அவனிடம் வித்யாவின் ரிலேட்டிவ்ஸ் பற்றி சொல்லி குறைசொல்லும்போது. என்னம்மா இது? உங்களுக்காகத்தான் நான் இவளையே கல்யாணம் செய்தேன்? நீங்கதானே இவளை கல்யாணம் செய்யனும்னு சொன்னது? இப்போ நீங்களே வந்து அழுதால் என்னம்மா அர்த்தம்? என்றான் எரிச்சலுடன். இருந்தாலும் அவனுக்கு புரிந்தது, வித்யா கழுத்தில் தாலி ஏறியதும் வித்யா வீட்டை சேர்ந்தவர்கள் அவன் அம்மாவிடம் திமிருடன் பேசுவது, அலட்சியமாக நடந்து கொள்வது எல்லாமே. ஏதோ இவனை மட்டும் மஹாராஜன் போல் நடத்திவிட்டு அவன் அம்மாவை மட்டமாக நடத்தினால், இவன் எதையும் கண்டுகொள்ளமாட்டான் என்ற நினைப்பா என்னனு தெரியலை. மாணிக்கத்துக்கு எல்லாமே புரிந்தது. இருந்தும் அவன் பொறுமை யாகத்தான் இருந்தான். அவனால் எதுவும் செய்யவும் முடியவில்லை என்பது உண்மை.

நாலு வருடங்கள் முன்னால் வித்யாவின் தங்கை பிரபா திருமணத்துக்கு கடைசி நிமிடத்தில் தேவையான 6 லட்ச ரூபாய் இவன் அக்கவுண்ட்ல இருந்துதான் போனது. ஆறு லட்ச ரூபாய் வித்யா தங்கை கல்யாணத்திற்கு இவன் கொடுத்தது மாணிக்கத்தின் அம்மா அப்பாவிடம் அவன் சொல்லவில்லை. இதுபோல் பெரிய பணம் கொடுக்கும் விசயத்தை அவன் அம்மாவிடம் இருந்து எப்போதுமே மறைத்ததே இல்லை. ஆனால் இன்று இதைச்சொன்னால் தேவையில்லாத பல குழப்பங்கள் வரும் என்று அவன் அம்மா அப்பாவிடம் சொல்லாமல் விட்டுவிட்டான். கல்யாணம் ஆனபிறகுதான் அவன் இதுபோல் நிறையவே பொய் சொன்னான். உண்மைகளை மறைத்தான். கல்யாணம் ஆன பிறகு அவன் தரம் குறைந்துகொண்டு போவது அவனுக்கே புரிந்தது.

அவன் மனைவி வித்யா ஒண்ணும் பெரிய வேலை எல்லாம் பார்க்கவில்லை. ஆனால் அவளொரு நல்ல மனைவி, மற்றும் நல்ல தாய் என்பதில் அவனுக்கு எந்த சந்தேகமும் இல்லை. இக்கட்டான நிலைமையில் பண உதவி செய்ததால் இவனுக்கு வித்யா அம்மா அப்பா மற்றும் அவர்கள் சொந்தக்காரர்கள் அனைவரிடம் இருந்து தனி மரியாதை எல்லாமே கிடைத்தது. அவன் கொடுத்த அந்தப்பணம் திரும்பி வரப்போவதில்லை என்றும் தெரியும் அவனுக்கு.

வித்யா மற்றும் அவள் குடும்பத்தினருக்கு மாணிக்கத்தின் அம்மா அப்பா மட்டும் எது செய்தாலும் தப்பு. மாணிக்கத்தின் அம்மா அப்பாவுக்கு இப்போது வயதாகிவிட்டது, முன்புபோல் அவர்கள் இல்லை என்பது உண்மைதான். ஆனால் அப்படிப்பார்த்தால் வித்யா அம்மாவைவிட ஒரு அரைலூசு உலகத்தில் யாரும் இல்லை. மாணிக்கம் தனக்குள் சிரித்துக்கொள்வான். வரதட்சணை பற்றி கவலைப்பட்டு கொண்டிருக்கும் முட்டாள்கள் பலர் இதுபோல் மருமகனிடம் இருந்து பணத்தையெல்லாம் பெற்று சில மனைவிகள் தன் குடும்பத்தை நடத்துவது எங்கே தெரியப்போகிறது? என்று. இதுபோல் இவனுடைய பல நண்பர்களும் உதவி செய்ததாகவும் அவன் கேள்விப்பட்டான்

மதுரை வந்து இறங்கினார்கள் அவனும், மனைவியும், 4 வயது மகள் ராஜியும். வித்யா அப்பா ராமன் வந்து அவர்களை டாக்ஸி பிடித்து அழைத்து சென்றார். வித்யா வீட்டிற்கு வந்தவுடன் வித்யா தங்கை பிரபா அவர் கணவன் ராஜேஷ் எல்லோரும் அவனை அன்புடன் வரவேற்றார்கள். தீபாவளிக்கு என்ன படம் பார்ப்பது, எப்போ கோயிலுக்கு போவது எங்கே ஷாப்பிங் போவது என்று பலவிதமான ப்ளான்கள்.

வித்யாவுடன் தனியாக பேச நேரம் கிடைத்தது அவனுக்கு.

“வித்யா! நான் தீபாவளிக்கு காலையில் இங்கே சாப்பிட்டுவிட்டு பஸ் ஏறி காரைக்குடிக்கு எங்க வீட்டுக்கு போறேன் அம்மா அப்பாவை பார்க்க” என்றான் மாணிக்கம்.

“என்னங்க படத்துக்குப்போக டிக்கெட் எல்லாம் புக் பண்ணியாச்சு” என்றாள் வித்யா.

“அங்கேயும் இதே படம் ரிலீஸ் ஆகுதாம், என் தங்கச்சி மாப்பிள்ளை சொன்னார். நீ இங்கே பாரு நான் அங்கே பார்த்துக்கிறேன், வித்யா”

“இல்லைங்க தீபாவளி அன்று சேர்ந்து படம் பார்க்காம. அடுத்த நாள்வேணா நீங்க போகலாம் இல்லையா?”

“தீபாவளி அன்று என் அம்மா அப்பாவை பார்க்கனும் வித்யா. என்னைப் பெற்றவர்கள் அவர்கள். உனக்காக அவர்கள் உணர்ச்சிகளை மதிக்காமல் இருக்கமுடியாது! அவர்கள் குறையுள்ள சாதாரண மனுஷ ஜென்மம்தான். ஆனா எனக்கு அவங்க அம்மா அப்பா! இதையெல்லாம் சொன்னாத்தான் புரியுமா? உனக்கு அறிவு இல்லையா?” என்றான் சற்றே கோபமாக.

“உங்க வீட்டில் எனக்கு எதுவும் வசதியா இருக்காது” என்றாள் வித்யா.

“உண்மைதான். ஆனா உன்னை கல்யாணம் பண்ணலைனா நான் இதுவரை சம்பாரித்த பணத்தை வைத்து நல்ல வீடுகட்டி அவர்களை ராஜா ராணி போல என்னால் பார்க்க முடிஞ்சிருக்கும். என் சம்பாத்யம் எல்லாம் நம் ஆடம்பர செலவுக்கே போவதால்தான் அவங்க கஷ்டப்படுறாங்க” என்றான் மாணிக்கம்.

“எனக்கு அங்கே வசதியா இல்லை! பாத்ரூம் கூட ஒழுங்கா இல்லை!” வித்யா கண்ணில் வழக்கம்போல கண்ணீர்.

“நம்ம கல்யாணத்திற்கு முன்பும் இதே பாத்ரூம்தான் இருந்தது. உங்க அம்மா அப்பா இந்த பாத்ரூமைப்பற்றி எந்தக்குறையும் அப்போ சொல்லவில்லை! நீயும் எதுவும் சொன்னதில்லை. உன் தங்கை கல்யாணத்திற்கு நாம் கொடுத்த 6 லட்சத்தை வைத்து இதைவிட பலமடங்கு நல்ல வசதியா எல்லாம் என் வீட்டில் கட்டி இருக்கலாம். அதை இன்றுவரை நான் என் அம்மாவிடம் சொன்னதில்லை” என்றான் மாணிக்கம்.

“நான் வரலை அங்கே. ராஜியும் என்னோடதான் இருக்க ஆசைப்படுவாள்” என்றாள் வித்யா.

“இந்தா பாரு! நீ வரலைனா இங்கே யாரும் அழப்போறதில்லை. வேணும்னா இங்கேயே பர்மணண்ட்டா உங்க அம்மா அப்பாவுடன் இருந்துக்கோ. உன் மகளையும் நீயே வைத்துக்கொள்” என்று சொல்லிவிட்டு கோபமாக வெளியே புறப்பட்டான் மாணிக்கம்.

“ஹல்லோ”

“யார்ப்பா மாணிக்கமா? நல்லபடியா மதுரை வந்து சேர்ந்தீங்களா?”

“ஆமாம்மா. எந்த பிரச்சினையும் இல்லை. நான் தீபாவளிக்கு மதியம் வீட்டுக்கு சாப்பிட வர்றேன் ம்மா”

“வித்யாவும், உன் மகள் ராஜியும் கூட வர்றாங்களாப்பா?”

“நான் வர்றேன். அது போதாதா உனக்கு? அவங்க வர்றாங்க இல்லை தொலையுறாங்க. நான் தானே உன் பிள்ளை?” என்றான் மாணிக்கம் எரிச்சலாக

“ஏன்ப்பா இப்படிகோவிச்சுக்கிற?' என்றாள் அம்மா.

“பின்னே என்னம்மா நீங்கதான் இந்த சனியனை என் தலையில் கட்டி வச்சீங்க. இப்போ ஏதோ நான் தப்பு செய்துவிட்டது போல பேசுறீங்க? அவளுக்கும் அறிவே இல்லை. உங்களுக்கும் என் நிலைமை புரியலை. உங்கரெண்டு பேருக்கும் இடையில் மாட்டிக்கிட்டு என் நிம்மதி போச்சு” என்றான்.

“இல்லைப்பா அவங்களும் உன்னோட சேர்ந்து வந்தாத்தானே நல்லா இருக்கும்?”

“ஆமா. ஒண்ணு வேணா பண்ணலாம் அம்மா?”

“என்னப்பா சொல்ற?”

“எனக்கு அவளைவிட நீங்கதான் ரொம்ப முக்கியம். உங்க மேலே ஆணை. ஆனால் அவளோ அவ குடும்பமோ உங்களை என்றுமே மதிக்கப்போவதில்லை. ஏன்னா பொதுவா பெண்களுக்கு அழ மட்டும்தான் தெரியும். தன்னைப்போல் மற்றவர்களை நினைக்கவோ, ஒழுங்கா யோசிக்கவோ தெரியாது! அவளோ, அவ அம்மா அப்பா அப்புறம் அவங்க கூட்டமோ உங்கமேலே உள்ளன்போட இருக்கப்போவதில்லை! நான் அவளை விவாகரத்து பண்ணிடவா? அப்படி பண்ணிட்டா நிச்சயம் எப்போவும் போல் என் இஷ்டப்படி என்ன வேணா செய்யலாம் இல்லையா?”

“ஏன்ப்பா இப்படியெல்லாம் பேசுற? நீ நல்லா சந்தோஷமா இருந்தால்தானே அம்மாவுக்கு சந்தோஷம்?”

“சந்தோஷமாவா? உங்களுக்கோ அவளுக்கோ இது புரியப்போவதில்லை. இதற்கு ஒரு நல்ல முடிவுடன் வருவது கஷ்டம்மா. அவ உங்களை ஒரு போதும் புரிஞ்சுக்கப் போவது இல்லை. உங்களுக்கு அந்த ஏமாற்றப்பட்ட உணர்வு ஒரு போதும் போகப் போவதில்லை”

“அவங்க மாறியதைத்தான் நீயே பார்த்தியேப்பா?'

“நான் இல்லைனு சொல்லம்மா. அவங்க என்னை தாங்கோ தாங்குனு தாங்கிக்கொண்டு உங்களை மதிக்காமல் இருப்பது எனக்கு பிடிக்கும்னு நெனைக்கிறீங்களா? எனக்கு உங்களை மதிக்காத யாரையுமே பிடிக்காது. ஆனால் நான் சொல்வது உங்களுக்கு புரியலை. இதுக்கு நான் சொன்ன ஒரே ஒரு முடிவுதான்”

“நீ உன் மனைவி குழந்தையுடன் சந்தோஷமா இருப்பதுதான் எனக்கு நிம்மதிப்பா. விவாகரத்து செய்தால் நிச்சயம் அம்மா சந்தோஷமா இருக்க மாட்டேன். நான் அவ்வளவு கொடுமைக்காரி இல்லை” அழுகையுடன் வந்தது அவன் அம்மா வார்த்தைகள்.

“நான் சந்தோஷமா இருக்கேனா? ஏதோ இருக்கேன் அம்மா. ஆனால் நீங்க இப்படி அழுதுகொண்டு இருப்பது எனக்கு சந்தோஷமா இல்லை. சரிம்மா தீபாவளிக்கு மதியம் பார்க்கலாம்” என்று முடித்தான் மாணிக்கம்.

இணையத்தில் திருடியது


அங்கே இருந்த பெட்டிக்கடையில் ஒரு சிகரெட் வாங்கி பற்றவைத்தான். அவனுக்கு சிகரெட் குடிப்பது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்று நல்லாவே தெரியும். அவன் மனைவியும், அவன் அம்மாவும் அவனுக்கு தினமும் ரத்தக்கொதிப்பு கொடுக்கிறார்கள். அவன் தூக்கத்தை தினமும் கெடுக்கிறார்கள். அவன் உடல்நலத்தைக்கெடுக்கும் அவர்களை அவனால் தூக்கி எறியமுடியவில்லையே? பாவம் இந்த சிகரெட் மட்டுமா உடல் நலத்தைக் கெடுக்குது? என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு தன்னை சமாதானப் படுத்திக்கொண்டான் மாணிக்கம்.


பின் குறிப்பு: இந்தக் கதை முதல்ப் பதிப்பு பல வருடங்கள் முன்பு வந்த போது வாசித்த வாசகர்களில் பலர் இது ஒரு கற்பனைக் கதைனு நம்ப மாட்டேன் என்றார்கள்! :) 

28 comments:

துளசி கோபால் said...

இருதலைக் கொள்ளி எறும்பு:(

வருண் said...

வாங்க டீச்சர்! ஆசிரியர் தினத்தென்று சரியா வந்துருக்கீங்க! :)

---------------

எனக்குத் தெரிய ஒரு பேராசிரியர் (ஆமா பேராசிரியர்தான்), ரயில்ல விழுந்து தற்கொலை பண்ணிக்கிட்டாரு.

என்ன காரணம்னு சொன்னாங்கன்னா..

அவர் ஒரு ஏழைக் குடும்பத்தில் இருந்து வந்தவராம். மூத்த மகனாம். தம்பி தங்கைகள் எல்லாம் படிச்சுக்கொண்டு செட்டில் ஆகாமல் இருந்தாங்களாம்..படிச்சு வேலைக்கு வந்த இவரையே நம்பி அவர் அம்மா, தங்கை எல்லாம் இருந்தாங்களாம். ஆனால் திருமணமான பிறகு இவர் மனைவி (பணக்காரக் குடும்பத்தில் இருந்து வந்தவராம்), இவரை, அதுபோல் "இனிமேல்" உதவி செய்யக்கூடாதுனு தொடர்ந்து சண்டை போடுவாங்களாம்..இவரால் மனைவியைச் சமாளிக்க முடியவில்லை.. உதவாமலும் இருக்க முடியலையாம்.. வேற வழியில்லாமல் மனைவியை இப்படித்தான் தன்னை பலி கொடுத்து சமாளிச்சாராம்.

இது நான் கேஎள்விப்பட்ட "உண்மைக் கதை"! :(

----------------

உங்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துக்கள் டீச்சர்! :)

Avargal Unmaigal said...

///இந்தக் கதை முதல்ப் பதிப்பு பல வருடங்கள் முன்பு வந்த போது வாசித்த வாசகர்களில் பலர் இது ஒரு கற்பனைக் கதைனு நம்ப மாட்டேன் என்றார்கள்! ///

காரணம் நீங்கள் எழுதி சென்ற நடைதான். படிக்கும் போதே கதையோட ஒட்டிப் போகிறோம்.உங்கள் கதை நடை மிக தெளிவாகவும் இயல்பாகவும் இருக்கிறது பாஸ் பாராட்டுக்கள்..

Avargal Unmaigal said...

எங்க நம்ம மைதிலி டீச்சரம்மாவை காணோம்? அவங்க இந்த கதையை படிச்சிட்டு எவ்வளவு மார்க் போடுறாங்கன்னு பார்ப்போம்

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

நல்ல கதை. பலர் இப்படித்தான் இருக்கின்றனர் வருண் - வித்யாவைப் போல, அவள் பெற்றோரைப் போல, மாணிக்கத்தைப் போல..

எனக்கு ஒன்று எப்பவும் புரிவதில்லை, ஒன்றாய் மகிழ்ச்சியாய் இருக்க ஏன் தெரிவதில்லை மக்களுக்கு? ஒன்று இந்த மூலை அல்லது அந்த மூலை. உங்களுக்குப் புரிகிறது என்று நினைக்கிறேன்.. பெண்ணும் பெண்ணைப் பெற்றவரும் ஆணும் ஆணைப் பெற்றவரும் என்று பாகுபாடில்லாமல் இருதரப்பிலும் நீங்கள் சொன்ன காட்சிகள் நடக்கிறது. இரு மாதிரியும் பார்த்து சமூகத்தை நினைத்து வருந்தும் ஒரு மனுஷியின் கருத்து ..அவ்வளவுதான். :)

RajalakshmiParamasivam said...

நிறைய வீடுகளில் நடக்கும் அப்பட்டமான உண்மை. அழகிய நடையில் சுவாரஸ்யம் குறையாமல் எழுதியிருக்கிறீர்கள்.

மகிழ்நிறை said...

வாவ்!!! வருண் பல வருடத்திற்கு முன்னே இவ்ளோ தெளிவான நடை!!!
தீர்வே இல்லாத பல வாழ்க்கை சிக்கலை சுமந்து ஓடிக்கொண்டே இருக்கிற வாழ்கையை பிரதிபலிக்கும் விதமாய் முடிகிறது(?!) கதை......
family subject கதை !!!!
இப்போ புதுசா ஒன்னு எழுதுங்களேன்.
நிலவன் அண்ணா தான் என்கிட்டே அடிக்கடி சொல்லவார்"பேனாவை காயவிடதே தங்கச்சி"னு.
vanna know the humidity of your pen yaar:)

மகிழ்நிறை said...

** ஏன்னா பொதுவா பெண்களுக்கு அழ மட்டும்தான் தெரியும். தன்னைப்போல் மற்றவர்களை நினைக்கவோ, ஒழுங்கா யோசிக்கவோ தெரியாது! **
மிக்க நன்றி

துளசி கோபால் said...

வருண்,

சம்பவத்தையும், 'கதையையும்' கோபாலிடம் சொன்னபோது....

கதையின் நாயகன் கோழை. அதனால்தான் தற்கொலை செஞ்சுக்கிட்டார். என்னால் இவ்வளவுதான் முடியும் என்று தைரியமா தன் மனைவியுடமும், பெற்றோர்களிடமும் சொல்லி இருக்கணும் என்கிறார்.

நான் நினைப்பது என்னன்னா.....

பிழை அந்தப் பெற்றோர்களிடம்தான் இருக்குன்னு. முதல் பையன் எல்லாம் செய்யட்டுமுன்னு வரிசையா பெத்துக்குவாங்களா?

அவனுக்கும் ஒரு வாழ்க்கை இருக்குல்லே? மாமியார் வீட்டுக்கு உழைச்சுக்கொட்டணுமுன்னு இந்தக்காலத்துலே எந்தமருமகளாவது நினைப்பாளா?

அந்தப்பெற்றோர்களும் சரி... சாதாரண இடத்துலே பொண் எடுத்துருக்கலாம் இல்லையா? அதை விட்டுட்டு, பணக்கார சம்பந்தம் ஏன்? வெறுமனே பெருமை அடிச்சுக்கணுமுன்னுதானே?

அப்படி, தங்கைகளின் திருமணம் நடத்தனுமுன்னா, அதை முதலில் முடிச்சுட்டு, அப்புறம் மகனுக்குக் கல்யாணம் செஞ்சுருக்கலாம் இல்லையா?

உங்களாலே வீட்டுலே விவாதம் அதிகமாகிப்போச்சு!!! பேச்சு சுவாரஸியத்தில் நேத்து மோட்டர்வேயில் போகும்போது தப்பான டர்னிங் எடுத்து ரொம்பதூரம் பேசிக்கிட்டே போயிருக்கோம்:-))))

வருண் said...

****Avargal Unmaigal said...

///இந்தக் கதை முதல்ப் பதிப்பு பல வருடங்கள் முன்பு வந்த போது வாசித்த வாசகர்களில் பலர் இது ஒரு கற்பனைக் கதைனு நம்ப மாட்டேன் என்றார்கள்! ///

காரணம் நீங்கள் எழுதி சென்ற நடைதான். படிக்கும் போதே கதையோட ஒட்டிப் போகிறோம்.உங்கள் கதை நடை மிக தெளிவாகவும் இயல்பாகவும் இருக்கிறது பாஸ் பாராட்டுக்கள்..****

மணிகண்டன்னு ஒரு வாசகர் என்ன சொன்னார்னா.. "வருண்! நீங்க வித்யாவின் கோணத்தில் இதை எழுதினால் எப்படி இருக்கும்?" என்பதுபோல் சொன்னார். :)

மாணிக்கத்துக்கு வக்காலத்து வாங்குவதுபோல் எழுதியிருக்கீங்கனு சொல்லாமல் சொன்னார்.

அவர் சொல்வதும் சரிதான். :)


வருண் said...

***Avargal Unmaigal said...

எங்க நம்ம மைதிலி டீச்சரம்மாவை காணோம்? அவங்க இந்த கதையை படிச்சிட்டு எவ்வளவு மார்க் போடுறாங்கன்னு பார்ப்போம்***

என்னவோ சொல்லியிருக்காங்க! படிச்சுப் பாருங்க, தல! :)

வருண் said...

****தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

நல்ல கதை. பலர் இப்படித்தான் இருக்கின்றனர் வருண் - வித்யாவைப் போல, அவள் பெற்றோரைப் போல, மாணிக்கத்தைப் போல..

எனக்கு ஒன்று எப்பவும் புரிவதில்லை, ஒன்றாய் மகிழ்ச்சியாய் இருக்க ஏன் தெரிவதில்லை மக்களுக்கு? ஒன்று இந்த மூலை அல்லது அந்த மூலை. உங்களுக்குப் புரிகிறது என்று நினைக்கிறேன்.. பெண்ணும் பெண்ணைப் பெற்றவரும் ஆணும் ஆணைப் பெற்றவரும் என்று பாகுபாடில்லாமல் இருதரப்பிலும் நீங்கள் சொன்ன காட்சிகள் நடக்கிறது. இரு மாதிரியும் பார்த்து சமூகத்தை நினைத்து வருந்தும் ஒரு மனுஷியின் கருத்து ..அவ்வளவுதான். :)***

கிரேஸ்: உங்க கதைகள் எல்லாம் படிச்ச ஞாபகம் இருக்கு. ஒரு தாய் தன் மகள்னா ஒரு மாதிரியும் மருமகள்னா இன்னொரு மாதிரியும் நடந்து கொள்கிறாள்னு ஒரு முறை எழுதி இருந்தீங்க. அதையெல்லாம் மறக்க வில்லை :)

அதனால் இந்தப்பின்னூட்டத்தின் பின் இருக்கும் உங்க "மனசும்" புரியத்தான் செய்யுது.

அந்தமாதிரி தாய்களும் (மாமியார்களும்) இருக்காங்க! இங்கே உள்ள "வித்யா" போல் மருமகள்களும் இருக்காங்க! சரியா? :)

வருண் said...

***rajalakshmi paramasivam said...

நிறைய வீடுகளில் நடக்கும் அப்பட்டமான உண்மை. அழகிய நடையில் சுவாரஸ்யம் குறையாமல் எழுதியிருக்கிறீர்கள்.***

வாங்க ராஜி மேடம்! உண்மைதான், கற்பனைக் கதைகளில் வரும் ஹீரோயின்/ஹீரோக்களும் வில்லன்களும் சாதாரணமாக நம் வாழ்வில் அக்கம் பக்கத்தில் நம்முடன் வாழ்பவர்கள்தான்! :) உங்க கருத்துரைக்கு நன்றி. :)

வருண் said...

****வருண்,

சம்பவத்தையும், 'கதையையும்' கோபாலிடம் சொன்னபோது....

கதையின் நாயகன் கோழை. அதனால்தான் தற்கொலை செஞ்சுக்கிட்டார். என்னால் இவ்வளவுதான் முடியும் என்று தைரியமா தன் மனைவியுடமும், பெற்றோர்களிடமும் சொல்லி இருக்கணும் என்கிறார்.

நான் நினைப்பது என்னன்னா.....

பிழை அந்தப் பெற்றோர்களிடம்தான் இருக்குன்னு. முதல் பையன் எல்லாம் செய்யட்டுமுன்னு வரிசையா பெத்துக்குவாங்களா?

அவனுக்கும் ஒரு வாழ்க்கை இருக்குல்லே? மாமியார் வீட்டுக்கு உழைச்சுக்கொட்டணுமுன்னு இந்தக்காலத்துலே எந்தமருமகளாவது நினைப்பாளா?

அந்தப்பெற்றோர்களும் சரி... சாதாரண இடத்துலே பொண் எடுத்துருக்கலாம் இல்லையா? அதை விட்டுட்டு, பணக்கார சம்பந்தம் ஏன்? வெறுமனே பெருமை அடிச்சுக்கணுமுன்னுதானே?

அப்படி, தங்கைகளின் திருமணம் நடத்தனுமுன்னா, அதை முதலில் முடிச்சுட்டு, அப்புறம் மகனுக்குக் கல்யாணம் செஞ்சுருக்கலாம் இல்லையா?

உங்களாலே வீட்டுலே விவாதம் அதிகமாகிப்போச்சு!!! பேச்சு சுவாரஸியத்தில் நேத்து மோட்டர்வேயில் போகும்போது தப்பான டர்னிங் எடுத்து ரொம்பதூரம் பேசிக்கிட்டே போயிருக்கோம்:-)))) ****

டீச்சர்: இது ஒரு விவாதத்துக்குரிய ஒரு பிரச்சினைதான்.

இது திரு கோபாலுக்காக!

அவர் "கோழை" என்பதில் எதிர் கருத்தில்லை! ஆண்களும், மாமியார்களும், மருமகளை கொடுமைப்படுத்துதல், தீக்கிரையாக்குதல் போன்றவைகள்தான் நாம் அன்றாடம் கேள்விப்படுவது...அதுபோல் பெண்களுக்குத்தான் நாம் இதயம் கனிகிறோம்.. அவள் கோழையாக இருந்து தற்கொலை பண்னிக்கொண்டாலும் அவளுக்காக கண்ணீர் விடுகிறோம்..

ஆனால் ஒரு ஆண் கோழையாக இருக்கக்கூடாதா என்ன?

ஆணும் பெண்ணும் சமம் என்றால், ஆண் கோழையாக இருக்கவும்தான செய்வான். அதை மட்டும் ஏன் நாம் இளக்காரமாகச் சொல்லணும்.. அவனுக்காக பரிதாபப்படாமல், அவன் மேல் ஏன் கோபப்படணும்?

----------

உங்களுக்கும் ஒரு பதில் தர்ரேன். :) கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க. :)

வருண் said...

****நான் நினைப்பது என்னன்னா.....

பிழை அந்தப் பெற்றோர்களிடம்தான் இருக்குன்னு. முதல் பையன் எல்லாம் செய்யட்டுமுன்னு வரிசையா பெத்துக்குவாங்களா?

அவனுக்கும் ஒரு வாழ்க்கை இருக்குல்லே? மாமியார் வீட்டுக்கு உழைச்சுக்கொட்டணுமுன்னு இந்தக்காலத்துலே எந்தமருமகளாவது நினைப்பாளா?

அந்தப்பெற்றோர்களும் சரி... சாதாரண இடத்துலே பொண் எடுத்துருக்கலாம் இல்லையா? அதை விட்டுட்டு, பணக்கார சம்பந்தம் ஏன்? வெறுமனே பெருமை அடிச்சுக்கணுமுன்னுதானே?

அப்படி, தங்கைகளின் திருமணம் நடத்தனுமுன்னா, அதை முதலில் முடிச்சுட்டு, அப்புறம் மகனுக்குக் கல்யாணம் செஞ்சுருக்கலாம் இல்லையா?****


நான் பார்த்தவரைக்கும் பெற்றோர்கள் அவ்வளவு முன் யோசனையுடன் நடந்து கொள்வதில்லை. மகனுக்கு "பெரிய இடத்தில்" சம்மந்தம் செய்யாமல் ஒரு ஏழை பாழையா பார்த்து கட்டி வைத்தால் "கஷ்டம்"னா என்னனு வந்த மரும்களுக்குத் தெரியும்.. ஏழைக்குத்தான் ஏழைகள் கஷ்டம் தெரியும் என்பதுதான் நான் பார்க்கிற நிதர்சனம்.

பெற்றோர்கள் அப்படி யோசிக்கத் தெரிந்தவர்களாக் இருந்தால் மகனை "பேச்சளராகவே" தன் சுயநலத்திற்காக வைத்து இருப்பார்கள். இல்லைனா ஒரு "படிக்காத, வசதியில்லாத" பெண்ணாகப் பார்த்து திருமணம் செய்து வைத்து இருப்பார்கள்.

பொதுவாக பெற்றோர்கள், மகனுக்கு நல்லது செய்றேன்னு தங்கள் தலையில் மண் அள்ளிப் போட்டுக்கொள்வதுதான் அதிகம்னு நெனைக்கிறேன். :)

வருண் said...


***வீட்டுலே விவாதம் அதிகமாகிப்போச்சு!!! பேச்சு சுவாரஸியத்தில் நேத்து மோட்டர்வேயில் போகும்போது தப்பான டர்னிங் எடுத்து ரொம்பதூரம் பேசிக்கிட்டே போயிருக்கோம்:-)))) ***

நல்லவேளை ஆக்சிடெண்ட் எதுவும் ஆகலையே! :) அப்படி ஏதாவது ஆகியிருந்தால் நாந்தான் அதுக்கு "லையபிள்"னு ஏற்றுக்கொண்டிருப்பேன், டீச்சர்! :)))

வருண் said...



****வாவ்!!! வருண் பல வருடத்திற்கு முன்னே இவ்ளோ தெளிவான நடை!!!
தீர்வே இல்லாத பல வாழ்க்கை சிக்கலை சுமந்து ஓடிக்கொண்டே இருக்கிற வாழ்கையை பிரதிபலிக்கும் விதமாய் முடிகிறது(?!) கதை......
family subject கதை !!!!
இப்போ புதுசா ஒன்னு எழுதுங்களேன்.
நிலவன் அண்ணா தான் என்கிட்டே அடிக்கடி சொல்லவார்"பேனாவை காயவிடதே தங்கச்சி"னு.
vanna know the humidity of your pen yaar:)***

நிலவன் அண்ணா சொன்னது உண்மைதான், மைதிலி. ஆனால் நீங்க கவனிச்சுப் பார்த்தீங்கனா, நம் பதிவுலகில் ஏகப்பட்ட புதிய புதிய "பேணாக்கள்" ஒவ்வொரு நாளும் உருவாகிக்கொண்டுதான் இருக்கின்றன. :)

வருண் said...

****Mythily kasthuri rengan said...

** ஏன்னா பொதுவா பெண்களுக்கு அழ மட்டும்தான் தெரியும். தன்னைப்போல் மற்றவர்களை நினைக்கவோ, ஒழுங்கா யோசிக்கவோ தெரியாது! **
மிக்க நன்றி****

நீங்க எவ்வளவோ பரவாயில்லை.. இதுக்கே இத்தனை பெரிய நன்றி சொல்றீங்க..

நான், ஆண்களையும் இதைவிட பத்து மடங்கு தாறுமாற விமர்சிச்சு கதைகள்/கட்டுரைகள் நெறையா எழுதி இருக்கேன். ஆனா ஒரு ஆண் கூட அந்த வசங்களுக்கு நன்றி சொன்னதில்லை! :)))

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

என் கதையைப் படித்து இன்னும் நினைவில் வைத்திருப்பது மகிழ்ச்சி வருண். :)
சரிதான் வருண்..இருமாதிரியும் இருக்கிறார்கள்.

மகிழ்நிறை said...

**புதிய புதிய "பேணாக்கள்" **:((( நானும் பலநேரம் கவனக்குறைவா இப்படி எழுத்துப்பிழைகள் விடவே செய்கிறேன். கலாய்கிறீங்க தானே?

**ஆனா ஒரு ஆண் கூட அந்த வசங்களுக்கு நன்றி சொன்னதில்லை! :)))** விடுங்க பாஸ் அவங்களுக்கு தெரிஞ்சது அவ்ளோதான் னு சொல்ல ஆசை. அப்புறம் வருண் என்னை feminist என சொல்லக்கூடும்:)
எதுக்கு வம்பு:))))

வருண் said...

****தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

என் கதையைப் படித்து இன்னும் நினைவில் வைத்திருப்பது மகிழ்ச்சி வருண். :)
சரிதான் வருண்..இருமாதிரியும் இருக்கிறார்கள்.***

உங்க "கதைகளில்" இருக்கும் சீரியஸ் மெசேஜ் எப்போவுமே எடுத்துக்கொள்ளப் படுகிறது, கிரேஸ்!

உங்களுக்கும் ரெண்டு பசங்க இருக்காங்க இல்லையா? நீங்க ஒரு நல்ல மாமியாரா எதிர்காலத்தில் இல்லாமல் போகமாட்டீங்க. அப்படியே காலச்சுழற்சியில் நீங்க போயிட்டீங்கனா, உங்க கதையை உங்களுக்கே மேற்கோள் காட்டணும் இல்லையா? :) Take it easy! :)

வருண் said...

**Mythily kasthuri rengan said...

**புதிய புதிய "பேணாக்கள்" **:((( நானும் பலநேரம் கவனக்குறைவா இப்படி எழுத்துப்பிழைகள் விடவே செய்கிறேன். ***

நான் கவனமாக எழுதினாலும் அதிலும் ஒன்று அல்லது இரண்டு எழுத்துப்பிழைகள் வந்துவிடும்! நீங்க என்னதான் முயன்றாலும் எழுத்துப்பிழை விடுவதில் என்னை ஜெயிக்க முடியாது! :)


***கலாய்கிறீங்க தானே?***

இல்லையே, புதிதாக எழுதுறவங்க பலர் (உங்களையும் சேர்த்துத்தான்) நிறையப்பேர் நல்லா எழுதுறாங்கணு சொன்னேன். அது உண்மைதான், மைதிலி. :)

/// **ஆனா ஒரு ஆண் கூட அந்த வசங்களுக்கு நன்றி சொன்னதில்லை! :)))** விடுங்க பாஸ் அவங்களுக்கு தெரிஞ்சது அவ்ளோதான் னு சொல்ல ஆசை. அப்புறம் வருண் என்னை feminist என சொல்லக்கூடும்:)
எதுக்கு வம்பு:))))///

எல்லாவற்றையும் சொல்லாமலே சொல்லியாச்சு! அப்புறம் இந்த "எதுக்கு வம்பு?" எதுக்கு? :))))

Take it easy, mythily! :-) We have scarcity for feminists in this world. Nothing wrong in you are being one of them. You should proudly say, "I am a feminist"! :-)

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

ஆஹா! எப்படி வருண்! நான் என் நெருங்கியத் தோழியிடம் சொல்லிவைத்திருப்பதை நீங்கள் சொல்லிவிட்டீர்கள்! ஆனால் உங்களுக்கு அந்த வாய்ப்புக் கிடைக்காது :)
Anyways, let wait for that time! :)

மகிழ்நிறை said...

You should proudly say, "I am a feminist"! :-)**
ஒரு பதிவு அளவு இதற்கு பதில் இருக்கு:)

சிம்ப்ளா சொல்லன்னுன்னா I hope humanism than feminism:)
சரி விடுங்க பாஸ்!

வருண் said...

***தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

ஆஹா! எப்படி வருண்! நான் என் நெருங்கியத் தோழியிடம் சொல்லிவைத்திருப்பதை நீங்கள் சொல்லிவிட்டீர்கள்! ஆனால் உங்களுக்கு அந்த வாய்ப்புக் கிடைக்காது :)
Anyways, let wait for that time! :)**

I know, you will be an awesome m-i-l, Grace! :)

வருண் said...

***Mythily kasthuri rengan said...

You should proudly say, "I am a feminist"! :-)**
ஒரு பதிவு அளவு இதற்கு பதில் இருக்கு:)

சிம்ப்ளா சொல்லன்னுன்னா I hope humanism than feminism:)
சரி விடுங்க பாஸ்!***

Amen! :)

நண்பா said...

Excellent. Its not a Story.. Its happening in real life a lot of places... Thanks..

வருண் said...

நன்றி, நண்பா! :)